திருக்கோயில் வரலாறு

“தூய்மை யோகம் ஆயினாய் துழாய் அலங்கல் மாலையாய்

ஆமையாகி ஆழ்கடல் துயின்ற ஆதிதேவ – நின்

நாமதேயம் இன்ன தென்ன வல்ல மல்ல வாகிலும்

சாமவேத கீதனாய சக்கரபாணி யல்லயே”

திருமழிசை ஆழ்வார் 

வரலாற்று தொன்மையும், ஆன்மீக மகத்துவமும் வாய்ந்த புனித  நகரமாம் கும்பகோணம்  திருத்தலத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலக பிரசித்தம் கொண்ட மகாமகத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

சகல பாவங்களையும் நீக்கும் அரிய திருவிழாவான மகாமகத்தோடு தொடர்புடைய 5 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகவும், ஆன்மீக அதிர்வுகள் செறிவுற்று ததும்பும் உன்னத திருக்கோயிலாகவும் விளங்குவதுதான் பாஸ்கர க்ஷேத்திரம் எனும் சிறப்பு பெயரில் அழைக்கப்பெறும் அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயிலாகும்.

சக்கரராஜா, ஹேதிராஜன், சுதர்சனராஜன், சக்கரத்தாழ்வார் என்று பல சிறப்பு பெயர்களில் அழைக்கப்பெறும் ஸ்ரீசக்கரபாணி சுவாமி, சுதர்சனவல்லி, விஜயவல்லி தாயார்களுடன் பிரதான மூலவராக அருள்பாலிக்கும் உலகின் ஒரே தனித்திருக்கோயில் இதுவாகும்.

 காவிரி ஆற்றுக்கு சற்று தெற்கில்  அமையப்பெற்றிருக்கும் இத்திருத்தலத்தில் ஸ்ரீசக்கரராஜா அறுகோண எந்திரத்தின் மீது சக்கர வடிவமான தாமரைப்பூவில், எட்டு திருக்கைகளுடனும்,  எட்டுத்திருக்கைகளிலும் எட்டுவிதமான ஆயுதங்களுடனும், மூன்று கண்களுடனும், ஸ்ரீசக்கரராஜா காட்சியளிக்கும் பேரழகு உலகில் வேறெங்கும் காணக்  கிடைக்காத அற்புதமாகும்…   

புராணங்களில் அருள்மிகு சக்கரபாணி சுவாமி திருக்கோயில்

ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் முடிவில் உள்ள சுலோகத்தை கவனித்தால் கும்பகோணம் நகரில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீசாா்ங்கபாணியின் பெயர் சாா்ங்கதன்வா – சாா்ங்கம் என்ற வில்லைக் கையில் ஏந்தியவர் என்றும், ஸ்ரீசக்கரபாணியின் பெயர்- ரதாங்கபாணி தேரின் உறுப்பான சக்கரத்தை அதாவது சக்ராயுதத்தை கையில் ஏந்தியவர் என்றும் இருப்பதை காணலாம்.

64 ஸர்க்கங்களைக் கொண்ட கும்பகோண ஷேத்திர மகாத்மியத்தில் 56 முதல் 61 வரையிலான ஸர்க்கங்களின் கதைச் சுருக்கம் பின் வருமாறு உள்ளது…

ஜலந்தராசுரன் என்னும் அசுரனை அழிக்கும் பொருட்டு ஸ்ரீசாா்ங்கபாணி தமது சக்கராயுதத்தினை அனுப்பினாா். அச்சமயத்தில் பிரம்மதேவர் ஒரு யாகத்தை செய்து கும்பகோணம் காவிரி நதியின் சக்கரப்படித்துறையில் உள்ள சக்கர தீர்த்தத்தில் அவப்ருத ஸ்நானம் செய்து எழுந்திருக்கையில் ஸ்ரீ விஷ்ணுவால் அனுப்பி வைக்கப் பெற்ற ஸ்ரீ சுதர்சன சக்கரமானது பாதாள உலகத்தில் ஜலந்தராசுரனை அழித்துவிட்டு காவிரியின் நடுவில் பூமியைப் பிளந்து கொண்டு வெளிக் கிளம்பி பிரம்மனின் திருக்கரத்தில் வந்தமர்ந்தது. இதனால் பெருமகிழ்ச்சியடைந்த பிரம்மதேவனும் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தை காவிரிக்கரையிலேயே பிரதிஷ்டை செய்து பூஜித்தார். 

காவிரியின் தென்கரையில் பிரம்ம தேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சுதர்சன சக்கரம் மிகுந்த ஒளியுடன் பிரகாசிக்க, சூரியன் ஸ்ரீ சுதர்சன சக்கரத்தின் ஒளியைக் கண்டு தன்னை விடவும் ஒன்று பிரகாசிக்க கூடாது என கர்வம் கொண்டு தன்னொளியைக் கூட்ட, ஸ்ரீ சுதர்சன சக்கரம் கோடி சூரிய பிரகாசத்துடன் பேரொளி விடுத்து ஆதவனின் ஒளியைச் தன்னொளியில் அடக்கி சூரியனின் ஆணவத்தை அழிக்க, சூரியன் ஒளியற்றவனாகவும் பலமற்றவனாகவும் ஆனான்.

சேஷன்மீது படுத்திருந்த பெருமாள் தமது கண்களிலிருந்த சூரியனின் ஒளியின்மையைக் கண்டு எழுந்தார். தேவர்கள் அனைவரும் அவரிடம் வந்து, சக்கராயுதத்தின் ஒளியால் சூரியன் ஒளியை இழந்து விட்டான் அதனால் உலகம் இருளில் மூழ்கியுள்ளது, கருணையுடன் காத்தருள வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.

ஒளியிழிந்த சூரியன் தன்னொளி தனக்கு மீண்டும் கிடைக்க ஸ்ரீ சுதர்சன சக்கரத்தையே சரணடைந்து பிராா்த்திக்க,  சுதர்சன சக்கரத்திலிருந்து ஸ்ரீ சக்கரபாணி சுவாமி மூன்று கண்களுடனும், எட்டு திருக்கைகளுடனும், அக்னி மயமான கேசத்துடனும் அருட்காட்சியளித்து, ஆதவனின் ஒளியை மீண்டும் தந்து அருள் செய்தார். சூரியன் ஸ்ரீ சக்கரபாணியை சரணடைந்து13 ஸ்லோகங்களால் துதித்தார்.மேலும் சூரியன்,   ஸ்ரீ் சக்கரபாணி சுவாமிக்கு ஆலயம்  நிர்மாணித்து பாஸ்கர க்ஷேத்திரம் என்று இத்திருத்தலம் தன்னுடைய பெயரால் அழைக்கப்பெற வேண்டுமென்று வரமும் பெற்றான்.

 அன்று ஸ்ரீசுதர்சன சக்கரம் காவிரியில் தோன்றிய இடம்தான் இன்று சக்கர தீர்த்தம் என்றும் சக்கரப்படித்துறை என்றும் வழங்கப்படுகின்றது.சக்கரப்படித்துறை உலகின் மிகப்புனிதமான படித்துறைகளில் ஒன்றாக போற்றப்படுவதுடன் உலகப் பிரசித்தி பெற்ற மகாமகப் பெருவிழாவில் வைணவ திருக்கோயில்களின் தீர்த்தவாரி நடைபெறும் இடமாகவும் விளங்குகிறது.

திருக்கோயிலின் நடை திறந்திருக்கும் நேரம்

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை  —  மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை

Close Menu
Translate